×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

532. ஸத்யதர்மணே நமஹ (Sathyadharmaney Namaha)

தன்னைக் குறித்துத் தவம் செய்த கர்தமப் பிரஜாபதிக்குக் காட்சி அளித்த திருமால், அவருக்கு இல்வாழ்க்கையும் நன்றாக அமையும், முக்தியும் நிச்சயம் கிட்டும் என்று வாக்களித்து இருந்தார். அதன்படித் திருமாலின் அருளால், கர்தமப் பிரஜாபதியும், அவரது மனைவியான தேவஹூதியும் தங்கள் இல்வாழ்வை ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். முன்பே திருமால் வாக்களித்து இருந்ததற்கேற்ப, அந்த ஒன்பது பெண்களுக்கும் ஏற்ற மாப்பிள்ளைகள் அமைந்தார்கள். அந்தந்த மாப்பிள்ளைகளுக்கு அவர்களை மணமுடித்து வைத்தார் கர்தமப் பிரஜாபதி.

இப்படிக் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றிய பின், துறவறம் மேற்கொள்வது குறித்துச் சிந்திக்கலானார் கர்தமர்.அப்போது தேவஹூதி கர்தமரிடம், “சுவாமி, நீங்கள் துறவறம் போக முடிவெடுப்பது போல் தெரிகிறது. நீங்கள் மட்டும் இறைவனை அறிந்து அவன் பாதங்களை அடைந்தால் போதுமா. அடியேனுக்கும் அந்த ஆசை இல்லையா. அதனால் அடியேனுக்கும் நீங்கள் இறைவனைக் குறித்து உபதேசம் செய்தருள வேண்டும். அதன்பின் துறவறம் பற்றிச் சிந்தியுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டாள்.

அதைக் கேட்ட கர்தமப் பிரஜாபதி, “நான் துறவறம் பற்றிச் சிந்தித்தது உண்மைதான். ஆனால், இப்பொழுது உடனே நான் துறவறம் மேற்கொள்ளப் போவதில்லை. பகவானின் வாக்குப்படி நமக்கு ஒரு பத்தாவது குழந்தை பிறக்கப் போகிறது. நமக்கொரு மகன் பிறப்பான். அவன் பகவானின் அம்சமாக பிறப்பான். இறைவனே வந்து நமக்கு மகனாகப் பிறக்கவுள்ள நிலையில், அவரைத் தரிசிக்காமல் நான் துறவறம் போக மாட்டேன். நமது மகனாக பிறக்கப் போகும் பகவானின் அம்சமான கபில வாசுதேவர், இப்போது உன் கருவில் உள்ளார். இறைவனை அடைவதற்குரிய வழிகளுள் ஒன்றான சாங்கிய யோக முறையை அந்தக் கபில வாசுதேவர் உலகத்துக்கே உபதேசிப்பார். அவரே உனக்கும் பகவானைப் பற்றி உபதேசிப்பார். அவர் உபதேசிக்கும் வரை காத்திரு’’ என்று சொன்னார்.

அவ்வாறே கருவுற்றிருந்த தேவஹூதிக்கு உரிய காலத்தில் அழகான ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை திருமாலின் அவதாரமான கபில வாசுதேவர் என்று உணர்ந்த கர்தமர், கபிலரை வணங்கிவிட்டு அதன்பின் துறவறம் சென்றார். காட்டில் இடைவிடாது திருமாலின் வடிவமான கபிலரைத் தியானித்த கர்தமர், உரிய காலத்தில் முக்தி அடைந்துவிட்டார். தேவஹூதிக்குக் கபில வாசுதேவர், ஆத்மா – பரமாத்மாவைக் குறித்த உபதேசமாகிய சாங்கிய யோகத்தை உபதேசித்துத் தேவஹூதி முக்தி பெறுவதற்கும் வழிகாட்டினார்.

அவளும் அவ்வாறே நற்கதி பெற்றாள். அதன்பின் கபில வாசுதேவர் உலகெங்கும் சாங்கிய சாஸ்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். கர்தமருக்குத் திருமால் செய்த அனுக்கிரகங்கள் என்னென்ன என்று சற்றே யோசித்தால்,

* தேவஹூதி என்ற நல்ல மனைவி
* அவளுடன் கூடிய நல்ல இல்வாழ்க்கை
* ஒன்பது பெண் குழந்தைகள்
* அந்த ஒன்பது பெண்குழந்தைகளுக்கும் ஏற்ற மணமகன்கள்
* பத்தாவது குழந்தையாகத் திருமாலே அவதாரம்
* அவரே தேவஹூதிக்குச் செய்த ஞான உபதேசம்
* அவரது அருளால் கர்தம-தேவஹூதி தம்பதியருக்கு முக்தி.

ஆக, இவ்வுலகில் வாழும் நல்ல இல்வாழ்க்கை தொடக்கமாக, அவ்வுலகப் பெருவாழ்வாகிய முக்தி வரை தன் பக்தருக்கு என்னென்னவெல்லாம் தருவதாகத் திருமால் வாக்களித்தாரோ, அவை அனைத்தையும் குறைவின்றி அருளியிருக்கிறார் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. கர்தமருக்கு, தான் கொடுத்த அனைத்து வாக்குகளையும் நிறைவேற்றியதால், கபில வாசுதேவர் ஸத்யதர்மா என அழைக்கப்படுகிறார்.

ஸத்யதர்மா என்றால் தன் செயல்களிலே நேர்மையாக இருந்து கொடுத்த வாக்கு அனைத்தையும் நிறைவேற்றுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 532-வது திருநாமம்.

`ஸத்யதர்மணே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் நேர்மையுடன் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கத் திருமால் அருள்புரிவார்.

533. த்ரிவிக்ரமாய நமஹ (Trivikramaaya Namaha)

கர்தமப் பிரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் மகனாகத் திருமால், கபில வாசுதேவர் என்ற திருநாமத்துடன் அவதரித்தார். இறைவனே தங்களுக்கு மகனாக வந்தமையை எண்ணி, கர்தமரும் தேவஹூதியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். கபிலரின் திருமேனி ஒளியாலே கர்தமரின் ஆசிரமம் ஒளிபெற்று விளங்கியது. அவர்களின் முகத்திலும் புன்னகை ஒளிவீசியது. இப்படி அவர்கள் கபிலரின் அவதாரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கபில மூர்த்தியைத் தரிசிக்க விரும்பிய பிரம்மா, கர்தமரின் ஆசிரமத்திற்கு வந்தார். தனது மகனான கர்தமரிடம் பிரம்மா, “தந்தை சொல்வதைக் கேட்டு நடப்பதுதான் மகனுக்கு முதல் கடமை. உன் தந்தையான எனது பேச்சைக் கேட்டு நீ நடந்து, என் வாக்கை நீ நிறைவேற்றியதில் எனக்கு மகிழ்ச்சி’’ எனக் கூறினார்.

ஏனெனில், கர்தமருக்கு முக்தி அடைவதில்தான் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தையான பிரம்மா, பிரஜாபதி ஸதானத்தில் கர்தமரை அமர்த்தினார். உலகில் பிரஜைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பைக் கர்தமருக்கு அளித்தார். தந்தையின் கட்டளையையும் மீறாமல், அதே நேரம் முக்திக்கான வழியும் பாதிக்கப்படாமல் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் பகவானை நோக்கித் தவம் புரிந்தார் கர்தமர்.

அந்த எண்ணத்தைப் பாராட்டும் விதமாகத்தான், பகவான் கர்தமருக்குக் காட்சி கொடுத்துத் தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு கொடுத்தார். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், பிரம்மா கர்தமரைப் பாராட்டினார். மேலும், கர்தமனே உனக்கு மகனாகப் பிறந்திருப்பது பகவான் நாராயணன்தான். பொன்போன்ற குழல்கற்றைகளோடும், தாமரைக் கண்களோடும், திருவடியில் தாமரை முத்திரையோடும் இருக்கும் இந்தக் குழந்தையின் தோற்றத்தைப் பார். திருமாலுக்குரிய அடையாளங்களோடேயே இக்குழந்தை வந்து பிறந்துள்ளது. இவர்தான், உலகுக்கே `சாங்கிய யோகம்’ என்ற பெயரில் ஆத்ம-பரமாத்ம தத்துவங்களை உபதேசிக்கப் போகிறார். உன் தவத்துக்குப் பரிசாகவும், உன் பக்திக்கான வெகுமதியாகவும், உன் எண்ணத்துக்கான கௌரவமாகவும்தான், திருமாலுக்கே தந்தையாகும் பேறு உனக்குக் கிட்டியுள்ளது என்றார் பிரம்மா.

மேலும், கர்தமர் – தேவஹூதி இருவரையும் பார்த்து, இவர் உலகிலே சித்த புருஷர்களாலும், ஞானிகளாலும், சான்றோர்களாலும் போற்றப்படுபவராக விளங்கப் போகிறார். ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்று வேதங்களுக்குள்ளே யார் ஒருவன் நிறைந்துள்ளானோ, அந்த இறைவனேதான் உங்களுக்கு மகனாக வந்திருக்கிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரம்மதேவர் கூறினார்.

பொதுவாக, நான்கு வேதங்கள் இருந்தாலும்கூட, ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்றைப் பிரதானமாக எடுத்து, அவற்றை `த்ரயீ’ என்றும் மூன்றுவேதம் என்றும் சொல்வது வழக்கம். தந்தையின் வாக்கை நிறைவேற்றும் ஒவ்வொரு தனயனையும், தான் விரும்பி ஆதரிப்பேன் என்று உணர்த்தவே திருமால் தந்தை சொல்லில் நிலைநிற்கும் கர்தமருக்கு மகனாகத் திருமால் தோன்றினார்.

ஸம்ஸ்க்ருதத்தில், `த்ரி’ என்றால் மூன்று, `விக்ரம’ என்றால் நிறைந்திருப்பவர். `த்ரிவிக்ரம’ என்றால் மூன்று வேதங்களிலும் நிறைந்திருப்பவர். மூன்று வேதங்களில் நிறைந்த திருமாலே கபில மூர்த்தியாக வந்தபடியால், த்ரிவிக்ரம என்று கபிலருக்குத் திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 533-வது திருநாமம்.

`த்ரிவிக்ரமாய நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், வேதங்களின் பொருளை உணரும் பக்குவத்தை நமக்குத் திருமால் தந்தருள்வார்.

534. மஹர்ஷயே நமஹ(Maharshaye Namaha)

கர்தமர் தமக்கு மகனாகத் தோன்றிய கபில வாசுதேவரைத் தரிசித்து, அவரைத் துதித்துவிட்டு, துறவறம் சென்றார். முன்பே தேவஹூதி தன் கணவரான கர்தமரிடம் ஆத்ம தத்துவம் குறித்த உபதேசம் செய்யுமாறு பிரார்த்தித்திருந்த போது, நம் மகனாகிய கபில வாசுதேவர், உனக்கு உபதேசிப்பார் என்று முன்பே கர்தமர் கூறியிருந்தார். அந்த அடிப்படையில், தனது மகன் கபிலரிடம் தனக்கு உபதேசம் செய்தருளுமாறு தேவஹூதி பிரார்த்தித்தாள். கபில வாசுதேவர் இறைவனை அடையும் வழியாகிய பக்தியோகத்தை உள்ளடக்கிய சாங்கிய சாஸ்திரத்தைத் தேவஹூதிக்கு உபதேசித்தார். அவ்வாறு பக்தியிலே ஈடுபடுபவன் ஆத்மாவைக் குறித்த ஞானத்தோடும், உலகியல் விஷயங்களில் வைராகியத்தோடும் திகழ வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்துள்ளார். கருவிலே குழந்தை உருவாகி வருவதை விஞ்ஞானப் பூர்வமாகத் தேவஹூதிக்கு உபதேசிக்கிறார் கபிலர். கருவில் இருக்கும் குழந்தைக்கு முதல் மாதத்தில் தலை உருவாகிறது.

இரண்டாம் மாதத்தில் கை கால்கள் வேறுபட்டுத் தெரியத் தொடங்குகின்றன. மூன்றாம் மாதத்தில் நகங்கள் ரோமங்கள், எலும்புகள், தோல் உருவாகின்றன. மூன்று மாதம் நிறைவடைந்தவாறே ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது தெளிவாகிறது.நான்காம் மாதத்தில் ரத்தம், மாமிசம் ஆகிய அனைத்துமே நன்றாக உருவாகிவிடுகின்றன. ஐந்தாம் மாதத்தில் பசி தாகத்தை நன்றாக உணர்கிறது குழந்தை.

ஆறாம் மாதத்தில் குழந்தை நன்றாக அசையத் தொடங்குகிறது. ஆறு மாதக் குழந்தையாக சிசு இருக்கும் போது, பகவான் அதற்கு ஒரு காணொலிக் காட்சியைக் காட்டுகிறார். இதுவரை அந்த ஜீவாத்மா எடுத்து பிறவிகள், அவற்றில் செய்த பாபங்கள், அதற்காகப் பெற்ற தண்டனைகள் ஆகியவற்றைக் காணொலியில் காட்டுகிறார் இறைவன். அதைப் பார்க்கும் அக்குழந்தை, இப்பிறவியையாவது வீணடிக்காமல் இறைவனை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்கிறது. அதன்பின் பத்து மாதம் நிறைவடையும் வேளையில், `ஸூதி மாருதம்’ என்ற ஒரு காற்று குழந்தையை வந்து பீடித்துக் கொள்கிறது.

அதுதான் குழந்தையின் தலையைக் கீழ் நோக்கித் திருப்பி, பிரசவத்துக்கு வழிவகை செய்கிறது. ஆனால் அந்தக் காற்றால் பீடிக்கப்பட்டவாறே, குழந்தை கருவுக்குள், தான் மேற்கொண்ட தீர்மானங்களை எல்லாம் மறந்துவிடுகிறது. பக்தியில் ஈடுபடவேண்டும் என்பதை மறந்து, எல்லாரையும் போலே உலகியல் விஷயங்களிலே ஈடுபடத் தொடங்கிவிடுகிறது.

எனவே அப்படியெல்லாம் மனதை அலையவிடாது, மனதை இறைவனின் திருவடிகளில் ஈடுபடுத்தி, முக்தி அடைவதற்கான வழியில் நிலைநிற்க வேண்டும் என்று பலவாறு உபதேசம் செய்தார் கபில வாசுதேவர். ரிஷி என்றால் சாமானியரின் கண்களுக்குத் தெரியாத விஷயங்களையும், காணவல்ல நுண்ணிய பார்வை உடையவர் என்றும் பொருள். சாமானியரால் காணமுடியாத குழந்தையின் உற்பத்தி, கருவின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் இருந்து தொடங்கி, ஆத்மா முக்தி அடைவது வரை அனைத்து சூட்சுமமான விஷயங்களையும் பிரத்தியட்சமாகக் கண்டு அவற்றை உபதேசமும் செய்தபடியால், கபில வாசுதேவர் `மஹர்ஷி’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 534-வது திருநாமம்.

`மஹர்ஷயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நுண்ணிய பார்வை கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

535. கபிலாசார்யாய நமஹ (Kapilaachaaryaaya Namaha)

கபில வாசுதேவர் தேவஹூதிக்குப் பல நுண்ணிய விஷயங்களை உபதேசம் செய்தருளினார். அவற்றுள் பகவானின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால் நாம் பக்தி யோகத்தில் ஈடுபடவேண்டும் என்று அவர் செய்த உபதேசம் மிகவும் முக்கியமானதாகும். காதலோடு இறைவனைத் தியானிப்பதற்குத் தான் பக்தி யோகம் எனப் பெயர். இதற்கு ஞானம், வைராக்கியம் என இரண்டு அங்கங்கள் உள்ளன. ஞானம் என்றால் பகவானைப் பற்றிய புரிதல். வைராக்கியம் என்றால் உலகியல் விஷயங்களில் பற்று வைக்காமல், பகவானிடத்தில் ஈடுபடுதல். இவற்றோடு கூடிய பக்தி யோகத்தில் ஈடுபட்டால் பகவானை அடையலாம் என தேவஹூதிக்கு உபதேசம் செய்தார் கபிலர்.

உபதேசத்தைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள் தேவஹூதி. மிகப்பெரிய ஞானப் பொருளைத் தனக்கு உபதேசித்தருளிய கபிலருக்குக் கைம்மாறு அறியாது மௌனத்தில் ஆழ்ந்தாள். கபிலரோ, புன்னகையோடும் கையில் உபதேச முத்திரையோடும் பிரசன்னமாக அவள் முன்னே விளங்கினார்.இந்த நிலையில், கபிலர் தேவஹூதியிடம், “தாயே உங்களுக்கு நான் உபதேசித்த இந்த சாங்கிய யோகத்தை, இனி உலகிற்கு உபதேசம் செய்யப் போகிறேன். அதனால், எனக்கு விடைகொடுங்கள் என்றார். தன் மகனைப் பிரியப் போகிறோமோ என்று எண்ணித் தேவஹூதி மிகவும் வருந்தினாள்.

ஆனால், கபிலர் தனது நிலையையும் தனக்கு அடுத்திருக்கும் அவதார நோக்கத்தையும் தேவஹூதிக்குச் சூட்சுமமாக உணர்த்தி அருளினார். அதனால் தேவஹூதியும் ஆறி இருந்தாள். தாயிடம் விடைபெற்றுக் கொண்டு கபிலர், உலகில் சாங்கிய யோகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதே நேரம் கர்தமரின் ஆசிரமத்தில் தங்கி இருந்த தேவஹூதி, தன் மகனான கபில வாசுதேவரின் வடிவத்தை இடைவிடாது தியானித்தபடி பக்தி யோகத்தில் ஈடுபட்டாள்.

அந்த பக்தியோகத்தில், சித்தி பெற்றவாறே உரிய காலத்தில் மோட்சமாகிய வைகுண்டத்தை அடைந்தாள் தேவஹூதி.தேவஹூதி சித்தி அடைந்த இடம் சித்தபதம் எனப் பெயர் பெற்றது. அவள் சரீரம் ஒரு நதியாக மாறியது. எத்தனை மனிதர்கள் வந்தாலும் போனாலும் நதி என்பது இடைவிடாமல் ஓடிக் கொண்டே இருப்பது போல், தனது ஞானமும் நதிபோல ஓடிக் கொண்டே இருக்கும் என்பதன் அடையாளமாக நதியாகவே ஓடத் தொடங்கினாள் தேவஹூதி.

இப்படித் தனது தாய்க்குக் குருவாக இருந்து அவளை மோட்சத்தில் சேர்த்தார் கபில வாசுதேவர். அதன்பின் உலகுக்கே குருவாக இருந்து உலகத்தோர் அனைவருக்கும் நல் உபதேசங்களை அருளினார். கபில என்ற சொல் பழுப்பு நிறத்தைக் குறிக்கும். ஆசார்யர் என்றால் குரு. பழுப்பு நிறம் கொண்டவராகத் தோன்றி, சிறந்த ஆசார்யராகத் திகழ்ந்து, தேவஹூதி உள்ளிட்ட பலரை பக்தியோகத்தில் நிலைநிறுத்தி அவர்களின் முக்திக்கு வழிகாட்டியதால், கபில மூர்த்தி, `கபிலாசார்யா’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 535-வது திருநாமம்.

`கபிலாசார்யாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குருவருளும், திருவருளும் நிறையும்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Saffron Spirituality ,Sathyadharmane Namaha ,Sathyadharmaney Namaha ,Karthama Prajapati ,Anandan ,
× RELATED சப்த மாதர் திருமேனிகள்